×

தவெக மாநாட்டில் மாயமான சிறுவன்... அதன்பின் நடந்த சம்பவம்

 

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேற்று முந்தினம் மாலை நடைபெற்று முடிந்தது. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்களில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி சாலை கிராமத்திற்கு வந்து சென்றனர். 

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவரின் மகன் மகேஸ்வரன் (18) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் இருந்து கிளம்பி அந்த பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் 25 பேர், ஏற்பாடு செய்திருந்த வேனில் மாநாட்டு திடலுக்கு வந்தார். பின்னர் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனார். உடன் வந்தவர்கள் நீண்ட நேரம் தேடியும் மாநாடு திடலில் இவரை காணாத நிலையில் போன் செய்த போது சிக்னல் கிடைக்கவில்லை என்றும் தான் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இருப்பதாக மெசேஜ் அனுப்பி உள்ளார்.  

பின்னர் நீண்ட நேரமாக விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த மகேஸ்வரன், தான் வந்த வாகனம் வராததால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் இருந்து நடக்க ஆரம்பித்து, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்தார். அங்கு வேறு மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழக தொண்டர்களின் காரில் ஏறி கிருஷ்ணகிரியில் தன்னை இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் தூக்க கலக்கத்தில் காரில் உறங்கிவிட்டான். இதனை அறியாத டிரைவர் காரை நேராக சேலம் மாவட்டம் தலை வாசலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு சென்று கேட்டபோது கிருஷ்ணகிரி தாண்டி வந்து விட்டதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். உடனே செய்வது அறியாது திகைத்து நின்ற மகேஸ்வரனிடம் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் பணம் கொடுத்து பேருந்தில் கிருஷ்ணகிரி சென்று விடுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் தலை வாசலில் இருந்து சேலத்திற்கு வருவதற்கு மட்டுமே பணம் சரியாக இருந்ததால் மகேஸ்வரன் சேலத்திலேயே இறங்கி உள்ளார்.

பின்னர் சேலத்தில் வெகு நேரமாக சுற்றித்திரிந்த மகேஸ்வரனை பார்த்த முதியவர் ஒருவர் அவரிடம் விசாரித்துள்ளார். நடந்த விவரத்தை கூறிய மகேஸ்வரனுக்கு அந்த முதியவர் உணவு வாங்கி கொடுத்து, கிருஷ்ணகிரி செல்வதற்கான பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் நேற்று மாலை 6 மணிக்கு தனது வீட்டிற்கு வந்தடைந்தார். மகேஸ்வரனை பார்த்ததும் அவரது தாய் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றார்.