லண்டனில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ்வின் ‘தொல்லியல் துறை’ புத்தக வெளியீட்டு விழா
லண்டனில் உள்ள நேரு மையத்தில் பேராசிரியர் ஹிமான்ஷு பிரபா ரே மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் இணைந்து எழுதிய "சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொல்லியல்: அமலானந்தா கோஷ் மற்றும் அவரது மரபு" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், அமலானந்த கோஷ் தொல்லியல் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். 1953 முதல் 1968 வரை இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த அமலானந்த கோஷ், பண்டைய நாகரிகங்கள் குறித்த பல படைப்புகளை வெளிகொணர்ந்தவர். குறிப்பாக காகர்-ஹக்ரா போன்ற ஆறுகளில் சிந்துவெளி நாகரிக தளங்களை கண்டறிந்து அகழாய்வு செய்யும் முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். அவரது மரபு, இந்திய தொல்லியல் ஆய்வுகளின் நவீனமயமாக்கல் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தொல்லியல் ஆராய்ச்சியை ஆவணப்படுத்துதல் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய நகரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றின் அகழாய்வுகளை முன்னெடுத்துச் சென்றார்.
இந்நிலையில் அமலானந்த கோஷ்ஷின் வாழ்க்கை மற்றும் பணி குறித்த புத்தகம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பேராசிரியர் ஹிமான்ஷு பிரபா ரே மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். "சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொல்லியல்: அமலானந்தா கோஷ் மற்றும் அவரது மரபு" என்ற பெயரிலான புத்தகம் லண்டனில் உள்ள நேரு மையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில், வில்லியம் டால்ரிம்பிள், பேராசிரியர் டேவிட் வெங்ரோ (யுசிஎல்) மற்றும் திரு. சைலேந்திர பண்டாரே (ஆஷ்மோலியன் அருங்காட்சியகம்) ஆகியோர் பங்கேற்றனர்.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அஜய் யாதவ், இந்திய தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குநராக (நிர்வாகம்), இந்திய அரசின் கேபினட் செயலகத்தின் இணைச் செயலாளராக மற்றும் இந்திய அரசு பணியாளர் தேர்வின் மூலம் மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.