விளையாட்டின்போது ஏற்பட்ட மோதல் - 13 வயது மாணவன் மரணம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வாலிபால் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், சக மாணவன் தாக்கியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஒரு சிறிய மோதல் கொலையில் முடிந்த சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த நல்லவன்னிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் (13) வயதான செல்வம், கரட்டாம்பட்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய செல்வம், அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பாரதியுடன் சேர்ந்து வாலிபால் விளையாடியுள்ளார். விளையாட்டின் போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமான இந்த மோதல் முற்றி, ஒரு கட்டத்தில் இருவரும் கைகளால் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் பாரதி தாக்கியதில், செல்வத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டிற்குச் சென்று முதலுதவி எடுத்துக்கொண்டு உறங்கிய செல்வத்திற்கு, திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே செல்வத்தின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன் மற்றும் புலிவலம் போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோதலில் ஈடுபட்ட மற்றொரு மாணவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சாதாரண விளையாட்டுப் இன்று ஒரு உயிரைப் பறித்ததோடு, மற்றொரு சிறுவனின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.