×

சென்னையில் ஆன்லைன் ரம்மியால்  இளைஞர் தற்கொலை!!

 

சென்னையில் ஆன்லைன் ரம்மியால்  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் கடன் தொல்லையால் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான  சட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் இயற்றியுள்ளன. அச்சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உயர்நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை  விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வழிகளிலும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 


இந்நிலையில் சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் 15 லட்சம் ரூபாயை இழந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியர் பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  39 வயதான இவர் போரூர் விக்னேஸ்வரா நகரை  சேர்ந்தவர் என்று தெரிகிறது.  கடந்த ஓராண்டாக பணி இல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையான இவர்,  ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.  அத்துடன் மது பழக்கத்தின் காரணமாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இளைஞர் பிரபுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.