×

ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு- எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன்? அரசு விளக்கம்

 

ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கை அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ள தமிழக அரசு வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் பட்டியல் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக  பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால விதித்திருந்த நிலையில் மனுக்கள் மீதான இறுதி விசாரணை  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில்  இன்று தொடங்கியது.

இந்த விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜூ,சித்தார்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்.வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு சார்பில் அதிகாரி பொன்னி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று,விசாரணைக்கு உகந்த வழக்கல்ல என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். டெண்டர் ஒதுக்கீடு செய்ததில்  வேலுமணிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியும் முன், சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும், ஆனால் அரசியல் காரணமாக சொத்துக்கள் விவரங்கள் குறித்து வேலுமணியிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் ஏதும் இல்லை எனவும் வாதிட்டனர்.ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும்,உள்நோக்கம்  என்பது  குறித்து உச்ச நீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,எல்லா வழக்குகளிலும் ஆரம்ப கட்ட விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார்.கடந்த  2020 ம் ஆண்டு மத்திய தணிக்கைதுறை அறிக்கையில் டெண்டர்கள் குறைந்துவிலையில் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு,விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததையும் குறிப்பிட்டார். இந்த வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் பட்டியல் தயாராக உள்ளதாகவும், உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளதாவும் வாதிட்டார்.முதல் தகவல் அறிக்கை என்பது ஆரம்ப நிலைதான் என்று தெரிவித்தார்.

இந்த கட்டத்தில் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூற முடியாது, தொடர் விசாரணையில்தான் நிறைய ஆவணங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவித்தார். அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அனைத்து ஆவணங்களும் சேகரிக்கப்பட்டதாவும், ஒரே ஐபி முகவரியில், ஒரே இடத்தில் டெண்டர்களை நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வாதிட்டார்.தொடர்ந்து வாதங்கள் நிறைவடையாத தால் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 8-ம் தேதி ஒத்திவைப்பட்டது.