×

"தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை" -  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

ஒரு கோடிக்கு மேலானவர்கள் 2ம் தவணை தடுப்பூசியை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில்  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 011 ஆக உயர்ந்துள்ளது .கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,980 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் குறைந்துள்ளது; எனினும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை. அப்படி காட்டவும் முடியாது. 23வது மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் நடக்கிறது. இந்த வாரத்திற்குள் குஜராத்தை போல் 10 கோடி தடுப்பூசி டோஸ் என்ற இலக்கை அடைந்து விடுவோம். ஒரு கோடிக்கு மேலானவர்கள் 2ம் தவணை தடுப்பூசியை உரிய நேரத்தில் செலுத்தவில்லை" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் 92% பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் தேங்கியிருக்கும் தடுப்பூசிகளை காலாவதியாவதற்குள் உபயோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.