×

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சிறப்பு குழு அமைப்பு - விஜயகாந்த் வரவேற்பு

 

 
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர்  மு.க. ஸ்டாலின்  உத்தரவிட்டிருப்பதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரவேற்கிறேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும்
இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும் இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி  கே. சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில், இதனை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.வேலை வாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இன்றைய இளைஞர்களும், பெண்களும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். எனவே இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது தமிழக அரசின் கடமை. பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.