×

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்  - விஜயகாந்த் ..

 

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர், டெக்னிசியன் என சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மூலமாக நிறைவேற்றப்படுவது வழக்கம். இதில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2019 செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா நெருக்கடி, ஆட்சி மாற்றம் என தொடர் தாமதம் காரணமாக பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.  5 முறை தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற  முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக  அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது.  அரசு ஊழியர்களின்  ஓட்டு வாங்கி வெற்றி பெற்றதை மறந்துவிட்டு திமுக அரசு தொடந்து தொழிலாளர்களை வஞ்சித்து வருவது எந்த விதத்தில் நியாயம்.  போக்குவரத்துதுறை மட்டுமின்றி, மக்கள் நல பணியாளர்கள், செவிலியர்கள், மின்சாரத்துறை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் பணி புரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து அவர்களை வஞ்சிக்கும் அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது.

 மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பழைய பென்ஷன் திட்டத்தை இதுவரை அமல்படுத்தாமல் இருப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் செயல். தேர்தல் சமயத்தில் வாக்கு வேட்டைக்காக அரசு ஊழியர்கள் தேவைப்படும் போது, அவர்களின் கோரிக்கைகளை மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?   எனவே அரசு ஊழியர்களின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்த்து அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என  தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.