×

"எதிர்பார்த்தது தான் கலங்காதீர்கள்.. துவண்டுவிடாதீர்கள்" - விஜயகாந்த் உருக்கம்!

 

வாழ்ந்து கெட்ட ஜமீன் என்று சொல்வார்கள். அது 100 சதவீதம் தேமுதிக கட்சிக்கே பொருந்தும். தேமுதிக ஜமீன் போல வாழவில்லை என்ற போதிலும் தமிழ்நாட்டின் ஜமீனாக வருவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெருந்தலைகள் இருந்தபோதே பூச்சாண்டி காட்டாமல் அதிரடியாக அரசியல் நுழைந்தவர் விஜயகாந்த். எடுத்த எடுப்பிலேயே இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இன்றைக்கு கட்சி தொடங்கி 5, 1- ஆண்டுகளாகியும் ஒருசில கட்சிகள் 1 வார்டில் ஜெயிப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. 

ஆனால் விஜயகாந்தின் தேமுதிக சில ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உயர்ந்து நின்றது. இரும்பு பெண்மணி என அதிமுக தலைவர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் எழுந்து நின்று அதட்டி பேசியதை எந்தவொரு தமிழரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அப்படியெல்லாம் இருந்துவிட்டு இன்று 1 வார்டுக்கும் 2 வார்டுக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறது தேமுதிக. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான். ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய வாக்கு சதவீதத்தை இழந்துகொண்டே செல்கிறது. விஜயகாந்த் ஆக்டிவ் அரசியலுக்கு வந்து பல காலமாகி விட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணியில்லாமல் போட்டியிட்டு இதிலும் பலத்த அடி வாங்கியுள்ளது. நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் மட்டும் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். பெரியளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால் தொண்டர்கள் கவலையுற்றுள்ளனர். அவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தேர்தலில் கூட்டணியின்றி, அதிகார பலம், ஆட்சி பலம், பண பலமின்றி, தைரியமாக களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன். 

திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியின்றி, தனித்தனியாக போட்டியிட்டதால், வாக்குகள் அதிகளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் ஆளும் திமுக அரசு அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனநாயக ரீதியில் நியாயமாக தேர்தல் நடைபெற்றிருந்தால் அனைவருக்கும் வெற்றி கிடைத்திருக்கும். தேர்தலில் வெற்றி என்பது நிரந்தரம் இல்லை. 

நிச்சயமாக அனைத்துக்கும் ஒரு முடிவும், ஒரு தீர்வும், ஒரு மாற்றமும் கட்டாயம் உண்டு. எனவே வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொண்டு, நாம் அடுத்த கட்டத்துக்குப் பயணிப்போம். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம், துவண்டு விட வேண்டாம். நமக்கு என்று ஓர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் பயணிப்போம். இந்தத் தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.