×

இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பேருந்துகள் இயங்கிறது. இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இத்தகைய சூழலில் ஆண்ட மற்றும் ஆளும் அரசின் தவறான கொள்கையினாலும், அதிகாரிகளின் மெத்தன போக்காலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதை ஈடு செய்வதற்கு தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்தும், எல்ஐசிக்கு செலுத்த வேண்டிய தொகையினையும் அந்தந்த இடத்தில் செலுத்தாமல் நிர்வாகத்திற்கு செலவு செய்து விட்டு, தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களைக் வழங்காமல் அலைக்கழிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பொது சேவையில் உள்ள போக்குவரத்து துறையை, படிப்படியாக தனியார் மையம் ஆக்குவதற்கு அரசு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், முதலில் ஆயிரம் பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும், ஓட்டுவதற்கும் பணியாளர்களை நியமித்து நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தை கைவிட்டு, போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பதற்கு அரசு கொள்கை அளவில் முடிவு எடுத்து, போக்குவரத்து துறை சிறந்த பொதுத்துறையாக செயல்படுவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது துறையாக செயல்படும் போக்குவரத்து துறை, பொதுமக்களுக்கு பயன்படாத துறையாக மாறுவதற்கு இந்த அரசு இந்த துணை போகக்கூடாது. அரசு அதிகாரிகளும், அரசும், கூடுதல் கவனம் செலுத்தி, இத்துறையை லாப நோக்கத்திற்காக செயல்படாமல், பொதுநோக்கத்திற்காக செயல்பட தேவையான நிதியினை மற்ற அரசு துறைகளுக்கு ஒதுக்குவது போல் இத்துறைக்கும் ஒதுக்க வேண்டும் .” என்று குறிப்பிட்டுள்ளார்.