×

வாரிசு, துணிவுக்கு சிறப்பு காட்சி- 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்

 

மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாரிசு, துணிவு திரைப்படங்களை ஜனவரி 11,12,13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகை 2023ஐ முன்னிட்டு, 11.01.2023, 12.01.2023, 13.01.2023 மற்றும் 18.01.2023 ஆகிய நான்கு நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு பார்வை 3-ல் காணும் அரசாணையில் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனுமதியின் பேரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கூடுதலாக அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார்ககள் வரப்பெற்றதன் அடிப்படையில், காவல்துறை மற்றும் வட்டாட்சியர்களிடம் விசாரணை அறிக்கை பெறப்பட்டது. மேற்படி விசாரணை அறிக்கையிலிருந்து தங்களது திரையரங்கில் 11.01.2023 அன்று அதிகாலை 01.00 மு.ப./04.00 மு.ப. துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது தெரியவருகிறது. அரசாணையில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் மேற்கண்ட விபரப்படி அதிகாலையில் திரைப்படங்களை திரையிட்டது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி விதிமீறிய செயலாகும்.

 எனவே, மேற்கண்ட தங்களது விதிமீறிய செயலுக்கு ஏன் தங்கள் மீது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களிடமிருந்து பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது - ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.