×

தமிழகத்தில் இன்று  50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்

 

தமிழகத்தில் இன்று  50 ஆயிரம் இடங்களில் 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,  தொடர்ந்து விழுப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.  பொது இடங்களில் சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில்,  தமிழகத்தில்  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.   வார இறுதி நாட்களில்  இதுவரை  35 தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.  சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.