×

ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் கலீபா மறைவு - சீமான் இரங்கல்!!
 

 

ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சையத் அல் நகியான் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர்   ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74). 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  இதனால் அங்கு  40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய அமீரக அதிபர் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் இன்று  துக்கம் அனுசரிக்கப்படும்  என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்ற தனது தந்தை சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்றியதோடு அவருக்குப் பின்னால் சுமார் 18 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்கியவர் சேக் கலீபா.தமிழர்கள் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான கௌரவமான வாழ்வியல் சூழலை கொண்டுள்ள நாடுகளுள் முதன்மையானது ஐக்கிய அரபு அமீரகம். அச்சூழலை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் ஐயா சேக் கலீபா.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கும், ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் போர் நினைவுச் சின்னத்தில் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சையத் அல் நகியான் மறைவையொட்டி அரை கம்பத்தில் கொடியை பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.