×

வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

 

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்துவருகிறது. இந்த வருடம் சீரான மழை பெய்துவந்த நிலையில், ஜூலை மாதம் முதல் மழை அதிகரித்து பெய்துவந்தது. இரண்டாம் வாரம் முதல் மழை மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வால்பாறை பகுதியில் இடைவிடாது அடை மழை பெய்துவருகிறது. 24 மணி நேரமும் பெய்துவரும் மழையால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையில் தொடங்கிய மழைய நீடித்து விடிய விடிய பெய்தது. இதனால் இன்று வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நடுமலையாறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை டவுனில் தாசில்தார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு மழை பாதிப்புகள் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.  மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறையளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டு உள்ளார்.