×

ஆர்.என்.ரவி ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார்- திருமாவளவன்

 

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன்  கார்கேவை டெல்லியில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு 
புத்தர் சிலை ஒன்றை பரிசளித்தார் தொல் திருமாவளவன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்காவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். நெருக்கடியான நேரத்தில் அவர் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்ததற்கு கிடைத்த அங்கீகாரம் . அம்பேத்கரின் கொள்கை வழியிலே சமூக நீதிக்காக குரல் கொடுக்கக் கூடியவர் கார்கே. 

பாரதிய ஜனதா அரசு உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் ஏற்பட்டிருக்கக் கூடிய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரியப்படுத்தினோம். அகில இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்தியையும் ஒருங்கிணைக்க கூடிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது தொடர்பான  எம்பிக்கள் அனைவரும் கையொப்பமிட்டு குடியரசு தலைவரிடம் மனுவை வழங்க உள்ளோம். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் குடியரசுத் தலைவர் நேரம் கொடுத்தவுடன் சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து ஆர் எஸ் எஸ் தொண்டராகவே செயல்படுகிறார் ஆளுநர். ஆளுநரின் பேச்சும் செயலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர தொண்டன் என்பதை தான் உறுதிப்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட, ஒருவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரிடம் அளிக்கவுள்ளோம்” என்றார்.