×

12-ம் வகுப்பு மாணவனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலை செய்ய வைத்த பள்ளி நிர்வாகம்

 

சென்னையில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்த விவகாரத்தில் நெல்லை நாடார் பள்ளியில் முதல்வர் ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணமாகி கவின்குமார்(17), தர்ஷன்(14) என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லைநாடார் பள்ளியில் +2 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பாத்ரூமில் குளிக்க சென்ற  மூத்தமகன் கவின்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பாரத்த போது கவின் தூக்கிட்ட நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை போலீசார் கவின் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த  வாரம் மகேஷின் இளையமகன் தர்ஷனை பள்ளி ஆசிரியர் செல்லப்பாண்டி பள்ளியில் அமர்ந்திருந்த போது எதற்காக இங்கு அமர்ந்துள்ளாய் என கேட்டதாகவும், அதற்கு தேர்வு முடித்து விட்டு அமர்ந்துள்ளதாக பதில் அளித்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் செல்லப்பாண்டி தர்ஷனை திட்டியுள்ளார்.  பின்னர் தர்ஷன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதை கேட்டு தந்தை மகேஷ் பள்ளிக்கு சென்று முதல்வரிடம் ஆசிரியர் செல்லப்பாண்டி மீது புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 29,30 ஆம் தேதி மாணவர் கவின்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை. நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கவின்குமாரை உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் சக மாணவர்கள் முன்பு அடித்துள்ளார். அப்போது அங்கு வந்த முதல்வர் மற்றும் ஆசிரியர் செல்லபாண்டி இருவரும் சேர்ந்து கவின்குமாரிடம் பாத்ரூமில் பாக்கு வைத்தது நீதானே என கேட்டுள்ளனர். அதற்கு கவின் நான் வைக்கவில்லை என கூறியதை கேட்காமல் நீதான் வைத்தாய் என எழுதி கொடு என கேட்டு வலுக்கட்டாயமாக வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டதுடன் உன் அப்பாவிடம் சொன்னா பயந்துவிடுவோமா என மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் கவின் வீட்டிற்கு தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி இனி பள்ளிக்கு செல்லமாட்டேன், எனக்கு அசிங்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

பின்னர் பெற்றோர் அவரை சமாதானம் செய்ததை அடுத்து இன்று காலை பள்ளிக்கு செல்ல வேண்டி குளிக்க சென்ற மாணவன் கவின்குமார் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நீலாங்கரை போலீசார் பள்ளி முதல்வர், ஆசிரியர் செல்லப்பாண்டி, உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.