×

கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம்  இன்று கலவரமாக உருவெடுத்துள்ளது.போராட்டத்தில் பள்ளியில் தீ வைத்து பள்ளி வாகனங்களும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டனர். மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பள்ளி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்று, போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.