×

பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

 

பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல் துறையினரிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்தது

கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியான பிரியா நேற்று முன்தினம் உயிர் இழந்தது தொடர்பாக, காவல்துறை சார்பில், மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு 12 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்காக  அமைக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட குழுவில் இருக்கும், எலும்பு முறிவு பேராசிரியர் சிங்கார வடிவேலன் மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை பேராசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் அறிக்கையை தயார் செய்தனர். அதில் கவனக்குறைவு காரணமாக தான் மாணவி பிரியா உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டதால், பால் ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரியா உயிரிழந்தது தொடர்பாக பெரவள்ளூர் காவல் துறை தரப்பில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174 கீழ், பெரவள்ளூர் போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் காவல் துறை தரப்பில், உயிரிழந்த மாணவி பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தேவையா? எந்த மருத்துவ முகாந்திரத்தின்  அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது? எந்தந்த  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்? மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது உடன் இருந்த  மருத்துவ பணியாளர்கள் யார்? கவனக்குறைவாக இருந்ததாக சொல்லப்படும் கண்காணிப்பணியை யார் மேற்கொள்ள வேண்டும்? ஏன் கண்காணிக்கவில்லை? ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் எந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது? அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் யார் யார்? மருத்துவர்களின் தரப்பு விளக்கம் என்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றது. இந்த கேள்விகளை விசாரணை நடத்திவரும் பெரவள்ளூல் காவல்துறை நேற்று மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் சமர்பித்தது. இதன் அடிப்படையில் இன்று மாலை பதில்கள் அடங்கிய அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது.

மருத்துவ கல்வி இயக்குனரகம் சமர்பித்த அறிக்கையில் தவறான சிகிச்சைகள் வழங்கப்பட்டதா? கவனக்குறைவு காரணமாக இதுபோன்று நடைபெற்றதா என்ற விவரம் உள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.