×

விவேக் வாழ்ந்த சாலைக்கு "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்து அரசாணை

 

நடிகர் விவேக் புகழை பறைசாற்றும் வகையில், மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர் வசித்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ம் நாளில் பிறந்தார் நடிகர் விவேக். விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் விவேக் ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம்., பட்டமும் பெற்றவர்.  சிறுவயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்ற இவர்,  பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார் . நடிகர் விவேக் மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது மதுரையில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.  இதையடுத்து இதன் இறுதி போட்டி  சென்னையில் நடைபெற்றபோது பாலசந்தருக்கு அறிமுகமானார். இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் விவேக். அதன்பின் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருது,  பத்மஸ்ரீ விருது உள்ளிட்டவற்றை வென்றுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி மறைந்த நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்படுகின்ற விவேக் அவர்களின் பெயரை அவர் வாழ்ந்த பகுதிக்கு  பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.