×

மாணவி ஸ்ரீமதியின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்..  விபத்தில் சிக்கியதால் பரபரப்பு..

 


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், திடீரென  விபத்தில் சிக்கியது.  

கனியாமூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்கிற மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார்.  தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ஸ்ரீமதியின் தாயார் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து,  உறவினர்கள் , பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் இந்த விவகாரம் கலவரமாக மாறி பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.  மாணவி இறப்புக்கு நீதி கேட்டு கடந்த 13 ஆம் தேதி முதல்  ஸ்ரீமதியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.  மாணவியின் உடலுக்கு 2 முறை பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் பெற்றோர் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நேற்று சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இன்று காலை  மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  பின்னர்  பலத்த பாதுகாப்புடன்  மாணவி ஸ்ரீமதியின்  உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து   சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  உடலை கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது.

ஆன்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னால், போலீசார் வாகனம், செய்தியாளர்கள் வாகனம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வாகனம்  என 20க்கும் மேற்பட்ட வாகனங்கள்  சென்றன.  வேப்பூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென , முன்னால் சென்ற கார் ஒன்று  அதன் வேகத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக  ஆம்புலன்ஸ் வாகனம் , அந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பெரிய சேதங்கள்  எதுவும் ஏற்படவில்லை. ஆம்புலன்ஸின்  முன் பக்கத்தில் சிறிது சேதம் ஆகியிருந்தது.  இதனையடுத்து அதனை  சரிசெய்த போலீஸார் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பரிசோதித்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.