×

மின்வெட்டு மூலம் வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் விற்பனை! திமுக மீது தங்கமணி குற்றச்சாட்டு

 

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் உள்ள ரவுண்டானா அருகே நாமக்கல் மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நாமக்கல், பள்ளிபாளையம், குமராபாளையம், ராசிபுரம், வெண்ணந்தூர், பரமத்தி, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “கடந்த எட்டு ஆண்டு காலங்களாக எங்கள் ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. மின்மிகை மாநிலமாகவே தமிழகத்தை வைத்திருந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்தாவது நாளில் இருந்தே தாங்கள் கொள்ளை அடிப்பதற்காக செயற்கை மின்வெட்டை உருவாக்கி வருகின்றனர். இதனால் யூனிட் ஒன்றுக்கு இருபது ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். 

தற்போது மின் கட்டண உயர்வால்  ஆண்டொன்றுக்கு 19 ஆயிரம் கோடி வரை அதிக லாபம் ஈட்டப்படுவதால் அதிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் எப்படி கொள்ளை அடிக்கலாம் என திட்டம் போட்டு கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்தி வருகின்றனர். மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த செலவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு என விளம்பரம் கொடுத்து வருகிறார். இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அமைச்சர்கள் பங்கு பெற்று வரும் கூட்ட நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை மக்கள் நன்று அறிவர்.

மின் கட்டணத்தில் பீக் ஹவர்ஸ் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அல்லாது பெரிய தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்படும். மின் கட்டணம் கட்டும்போது அதற்கான கட்டண உயர்வு குறித்து  மறைமுக கட்டணங்கள் தெரியவரும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் 40 தொகுதிகளையும் அதிமுக வெற்றி பெறும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா இந்து மதம் குறித்து இந்து மக்களின் மனது புண்படும் வகையில் பேசியதற்கு அவரது தலைமை தான் பதில் சொல்ல வேண்டும். ஆ ராசா பேசியதற்கு மக்கள் வருங்காலத்தில் பதில் சொல்வார்கள்” எனக் கூறினார்.