×

மக்கள் மத்தியில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பூர்வீக சொத்து மதிப்பீடுகள் அளவீடு- தங்கமணி

 

பொதுமக்கள் மத்தியில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் பூர்வீக சொத்து மதிப்பீடுகள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, 4.85கோடி ரூபாய், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நடைபெற்றது. அப்போது சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் முன்னிலையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டினை நான்கு பக்கவாட்டு சுவர் நீளம்,அகலம் வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட கட்டிட மதிப்பினை அளவீடு செய்தனர். தொடர்ந்து திருச்செங்கோடு சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர்  தங்கமணிக்கு சொந்தமான இரண்டு கடைகள் மற்றும் அம்மன் கோவில் வீதியில் உள்ள சாயஆலை அமைந்துள்ள இடத்தினை அளவீடு செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து 5மணி நேரத்திற்கு மேலாக தங்கமணிக்கு சொந்தமான 5000 சதுரஅடிக்கு மேலான அசையா சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணிகள் நிறைவுபெற்றது. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதின் அடிப்படையில் 60ஆண்டுகள் பழமையான  பூர்வீக சொத்தை அளவீடு செய்யும் பணிகள் மட்டுமே இன்று நடைபெற்றது. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில்  எனக்கு உள்ள நற்பெயருக்கு  களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு இருக்கிறது. நீதிமன்றம் இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்க்கு தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் மீண்டும் தருமமே வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக உள்ளது, எதிர்தரப்பு எங்கே சென்றாலும் முடியாது, நியாத்தின் பக்கம் நாங்கள் உள்ளதால் எங்களுக்கு சாதகமாக இருக்கும்” எனக் கூறினார்.