×

செய்யாறில் உருவாகிறது எத்தர் மின் வாகன தொழிற்சாலை- அமைச்சர் தங்கம் தென்னரசு

 

எத்தர் மின் வாகன தொழிற்சாலையை செய்யாறு தொழிற்பேட்டையில் அமைக்க தொழில்சாலை இசைவு தெரிவிக்கும் பட்சத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 

சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, எத்தர் என்கிற மின்சார வாகன தொழிற்சாலை 1500 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைய உள்ளதாகவும், அதை செய்யாறு தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அங்கு அந்த தொழிற்சாலை அமைக்கப்பட அரசு முன்வருமா என்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாகன தொழில் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், எத்தர் தொழில்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் முன்வருவதாகவும், 1500 ஏக்கர் நிலப்பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள நிலையில், தொழிற்சாலை இசைவு தெரிவிக்கும் பட்சத்தில் செய்யாறு தொழிற்பேட்டையில் தொழில்சாலையை அமைக்க அரசு ஆய்வு மேற்கொள்ளும் எனவும் கூறினார்.

இதேபோல் சட்டப்பேரவையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், கல்வராயன் மலைப்பகுதியில் கடுக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளதால் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். கடுக்காய் மருத்துவ குணம் கொண்ட பொருள் என்றும், சாயம் பதிக்கவும் மிகவும் பயன்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கடுக்காய் தொழிற்சாலை அமைக்க கடுக்கா கொடுக்காமல் அரசு பரிசீலிக்கும் என நகைச்சுவையாக கூறினார்.