×

அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சி- தம்பிதுரை

 

அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதும் சோதனை நடத்துவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியே என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கூறியுள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்' கட்சி அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை,  “தமிழ் உணர்வையும், திராவிட கலாச்சாரத்தையும் சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றவர் அண்ணா. தமிழின் மீது இருந்த அதீத உணர்வினால் மதராஸ் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர் அண்ணா. மாநில சுய ஆட்சி, தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என வலிமையாக குரல் கொடுத்தவர் அண்ணா. அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதும், சோதனை நடத்துவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமானது.

மேலும் இப்போதைய ஆளும் அரசின் திமுகவில் உள்ள அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினை எப்படியெல்லாம் விமர்சனம் செய்து பேசினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டண உயர்வு என அறிவிக்கப்பட்ட போது திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு ஆளும் அரசான அதிமுக தரப்பில் மத்திய அரசு கூறியதால் தான் மின் கட்டண உயர்வு செயல்படுத்தப்பட்டது என விளக்கம் அளித்த போது அதிமுக அரசு முதுகெலும்பில்லாத அரசு என எதிர்க்கட்சியான திமுக கூறியிருந்தது. ஆனால் இப்போது அதே திமுக ஆட்சியில் இருக்கும் போது மத்திய அரசு கூறுவதால் தான் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தை கூறுகிறார்கள் இது எந்த வகையில் ஏற்கத்தக்கது?” என கேள்வி எழுப்பினார்.