×

 மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதை தடுக்க தனிக்குழு அமைப்பு!

 

சென்னை மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதை தடுக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் கடந்த ஆக.5-ம்தேதி முதல் மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகளில் தொடர்புடைய சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மெரீனாகடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தேசியநகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.இக்குழுவினர் நாள்தோறும் மாலை 4 முதல் இரவு 12 மணிவரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டையும், குப்பையை கொட்டும் நபர்களையும் கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுவர்.

கடந்த ஆக.17 முதல் செப். 2-ம் தேதி வரை மெரீனா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 100, பெசன்ட் நகர்கடற்கரையில் ரூ.12 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும்போது, அரசால்தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கடற்கரையை உருவாக்க முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.