×

நெய் பொங்கலும், கேசரியும் எனக்கு ரொம்ப புடிக்கும்- ஆளுநர் ரவி

 

தமிழகத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான உணவு நெய் பொங்கல், கேசரி என தமிழக ஆளுநர் ஆர்.என்‌.ரவி தெரிவித்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் நிர்வாக இயக்குனர் லட்சுமி ராஜாராம், நிறுவனத்தின் தலைவர் கிஷோர் குமார் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பள்ளி மாணவி ஒருவர் தமிழகத்தில் தங்களுக்கு பிடித்த உணவு எது என்று ஆளுநரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, தனக்கு சிறு வயது முதலே உணவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை, உணவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல், மற்றும் கேசரி உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “தனக்கு இனிப்பு வகைகளில் கேசரி மிகவும் பிடித்தமான ஒன்று. மாணவர்கள் தங்களுடைய கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்றால் தங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அதைக்காட்டிலும், படிப்பு விஷயத்தில் அதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும், எடுத்துக்காட்டாக ஆலமரத்தின் விதை சமையலுக்கு பயன்படும் கடுகை விட சிறியது. ஆனால் அது மரமாகும் போது மிகப் பெரியதாக வளரும். தற்போது 24-மணி நேரமும் இன்டர்நெட் வசதி உள்ளது. இன்டர்நெட் நல்லது தான், ஆனால் அதை எல்லாவற்றுக்கும் நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் அதை விட மாணவர்களுக்கு பயனுள்ள கருவி வேறு ஏதும் இல்லை” என பேசினார்.