×

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் பேச்சு

 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில், 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  அரியலூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிம பூங்கா அமைக்கப்படும். சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகன வசதிக்கு சிமெண்ட் காரிடர் சாலை அமைக்கப்படும்.   ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது? ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்தகால ஆட்சி. தனது கையிலே அதிகாரம் இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது. தனது கையாலாகத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இப்போது இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார் கொடுக்கிறார்கள்.

 

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது. சிலர் ஆபத்து ஆபத்து என்று அலறிக்கொண்டிருக்கின்றனர். இப்படி சொல்லும் சிலருக்கு இருக்கும் பதவி நிலைக்குமா? என்று பயமாக உள்ளது. அதனால் தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத் பாண்டவனான ஆட்சி தான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது கவலைபடாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன்... ஆனால் விஷமத்தனம் கூடாது.