×

கடும் பொருளாதார நெருக்கடி - இலங்கை சென்றார் அண்ணாமலை
 

 

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,  உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ரூ. 80 கோடி செலவில் 40 ஆயிரம் டன் அரிசி,  28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் , ரூ. 15 கோடி ரூபாய்  செலவில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் என இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க உள்ளோம் என்றார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தனி தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

அத்துடன் இலங்கை மக்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது  குடும்பத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் தர தயார் என ஓபிஎஸ் அறிவித்தார்.  மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை இத்தீர்மானம் விளக்குகிறது என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார். இந்நிலையில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு வசிக்கும் தமிழர்களை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.  அத்துடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அறிந்து கொள்வார் என்று தெரிகிறது.