×

டிஎன்பிஎஸ்சியில் 5,417 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் உள்ளே!

 

கொரோனா பரவல் பல்வேறு திட்டமிடல்களை சீரழித்தது. குறிப்பாக அரசு வேலை வாங்க ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் படித்துக் கொண்டவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளி போட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தக்கூடிய பல்வேறு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமலேயே இருந்தன. தேதி அறிவிப்பதும் கொரோனா தலைதூக்கியதும் பின்னர் ஒத்திவைக்கப்படுவதுமாகவே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இச்சூழலில் தான் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வருகிறது.

இதனையொட்டி நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான தேதிகள்  வெளியிடப்பட்டுள்ளன.  மொத்தமாக 5,417 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. இந்த விண்ணப்பங்களைச் சமர்பிக்க 1 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கடைசி மார்ச் 23 ஆகும். தேர்வுகள் அனைத்தும் மே 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகின்றன.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழ் 100 கேள்விகள், திறனை பரிசோதிக்கும் (Aptitude) 25 கேள்விகள், பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் இடம்பெறும். ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு தமிழுக்கு பதில் ஆங்கில கேள்விகள் இடம்பெறும். 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.