×

ராமாயணமும் சேது சமுத்திர திட்டமும்! பேரவையில் காரசார விவாதம்

 

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு பேசினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில், ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுகிறவர்களும், மூட நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்களும் இத்திட்டத்தை அப்போது தடை போட்டார்கள் என்றார். மேலும், ஒன்றிய அரசு உடனடியாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதை தொடர்ந்து  பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி, ராமாயணம் என்பது முழுக்க  ஒரு கற்பனை கதை என்றும், ராமர் பாலம் என்று சொல்லி ஒன்றிய அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டதாகவும்,  கற்பனைகளையும், நம்பிக்கைகளையும் சிலர் வரலாறு என்று சொல்கிறார்கள் என்றார். இதை மக்கள் நம்ப வேண்டும் என முயற்சி செய்தாலும், கட்டுக் கதைகளும், கற்பனைகளும் நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது என்றும் குறிப்பிட்டார்.  

அப்போது தீர்மானத்தில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினா நாகேந்திரன், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா அல்லது எதிர்க்க வேண்டுமா என்பது குறித்து தான் பேச வேண்டுமே தவிர, அதை விட்டு ராமாயணம் கற்பனை கதைகள் என்று பேசுவது ஏற்புடையதல்ல என்றார். மேலும்,நாங்கள்  தெய்வமாக வணங்கும் ராமரை கற்பனை பாத்திரம் என்று பேசி கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தெய்வத்தை பற்றியோ மதத்தை பற்றியோ இங்கு யாரும் குறை சொல்லவில்லை என்றும்  திட்டத்தைப் பற்றி தான் பேசி உள்ளார்கள் என்று குறிப்பிட்டார். 

தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை ராமாயணம் என்பது சிறந்த கற்பனை கதை என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். அதேபோல முன்னாள் பிரதமர் நேருவும் ராமாயணம் என்பது சிறந்த கற்பனை கதை என்பதை குறிப்பிட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ராமர் என்பவர் கற்பனை பாத்திரம் என்று இந்த அவையில் பதிவாகி இருப்பது எங்கள் மனதை புண்படுத்துகிறது என்றார். எனவே கற்பனை கதை என்பதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். ராமர் என்பவர் ஒரு அவதார புருஷன் என்றும் சேது சமுத்திர திட்டத்தின் சாதக பாதங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக விளக்கம் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக உறுப்பினர் நயனார் நாகேந்திரன் பேசும்பொழுது ஒன்றிய அமைச்சர் சேது சமுத்திர பாலம் தொடர்பாக என்ன கூறினார் என்று தெரியவில்லை என்றார் இதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமர் பால கட்டுமானத்தை மனிதர் கட்டியதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றும், செயற்கைக்கோள் படத்தின் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளதாக  ஒன்றிய அமைச்சர் கூறியதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு  குறிப்பிட்டார்