×

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி மர்மமாண முறையில் உயிரிழந்தார். மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் மாணவியின் தாய் கூறியதை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைய முற்பட்ட நிலையில், அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் அங்கு வன்முறை மூண்டது. ஆத்திரமடைந்த போராட்டக்காரரகள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, போலீசாரின் பேருந்து, பள்ளி வானங்கள் உள்ளிட்டவற்றிற்கு தீ வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி லைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதேபோல் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய அவர் கூறியதாவது: மாணவி ஶ்ரீமதியை இழந்த வேதனையோடு இருக்கின்ற தாய்க்கு அரசு நேரில் சென்று ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் சந்தேகப்படுகிறார்கள். அப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டிருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அவர்களிடம் தெரிவித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.இன்று அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. இவர்களுடைய அலட்சியத்தால் அந்த தாய்க்கு நீதி கிடைக்காத காரணத்தினால் உற்றார் உறவினர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதனால் தான் இன்றைக்கு அந்த பள்ளியில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.