×

ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர வாடகையா ? - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

 

ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில், 140 இடங்களில் 20 கோடி ரூபாய் செலவில் தமிழக மின்சாரத்துறை சார்பில் நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து சென்னையில், 294 கோடி ரூபாய் செலவில், 2,025 நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப் பட்டுள்ளன. வரும் மழை காலங்களில், மின் வினியோகம் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காக, 1,681 'பில்லர் பாக்ஸ்'களின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குறுதியான, மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு நிச்சயம் விரைந்து நிறைவேற்றப்படும். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.