×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை  

 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கும்படி, சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

தமிழகத்திற்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் ஒரு பகுதியாக சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்த நிகிழ்ச்சி ஒன்றி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக அரசு சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிலையத்தில், 50 மாணவர்கள் சேர்க்கைக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் தற்காலிக இடம் கொடுத்து, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக நிறுவ வேண்டும்.அதேபோல, கோவையில் புதி தாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.  முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பதில் இருந்து, மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முறையை மாற்றக்கூடாது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகளை நிறுவ வேண்டும். உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர வழி செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்கள் ஐம்பதை, ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும்; 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை, 30 படுக்கைகள் உடைய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.