×

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதனை ஓடிடி தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

44-வது செஸ் ஒலிம்பிட் போட்டியானது தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. பொது பிரிவில் மூன்று அணிகளும் மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் என மொத்தம் 30 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மொத்தம் 187 நாடுகளில் இருந்து 1500க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், தொடக்க விழாவை போல் நிறைவு விழாவையும் பிரம்மாண்டமான முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறைவு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. 
நிறைவு விழாவை ஒளிபரப்ப காட்சி ஊடகங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், உரிமம் பெறுபவர்களுக்கு ஓராண்டிற்கான ஒளிபரப்பு உரிமமும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.