×

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

வ. உ. சிதம்பரனார் இந்திய விடுதலை சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.  ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தின் மூலம் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டார் . இதன் காரணமாக ஆங்கிலேய அரசால் தேச துரோகியாக குற்றம் சாட்டப்பட்ட இவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழிலும்,  ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் ,சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  தான் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டதுடன்,  மற்றவர்களையும் பங்கு கொள்ள இவர் முக்கிய காரணமாக இருந்தார்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில், வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 
சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  

இதேபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்! தற்சார்பு - தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.