×

மோசடி கும்பலுக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு

 

கோவையில் காப்பகம் என்ற பெயரில் மோசடி வேலைகளை செய்து வரும் கும்பலுக்கும், திமுகவினருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
 
இதுதொடர்பாக, அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  கோவை, தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் கிராமத்தில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அரசு அதிகாரிகளால், நான்கு ஆண்டுகளுக்கு முன் 'சீல்' வைக்கப்பட்டது. தி.முக., ஆட்சிக்கு வந்ததும், தொண்டாமுத்துார் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ரவி உதவியுடன், அந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் அவரது தலைமையில் திறப்பு விழா நடந்துள்ளது. கருணை பயணம் என்ற காப்பகத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ஜேக்கப், சைமன், ஜெபின், செந்தில்குமார் ஆகிய நால்வர், இதை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த காப்பகத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த அமைப்பினர், சாலையில் நடந்து சென்ற முதியோர்களை வழிமறித்து, வற்புறுத்தி காப்பக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட பா.ஜ.க தொண்டர்கள், மாவட்ட தலைவர் உத்தம ராமசாமிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை உதவியோடு, அந்த வாகனத்தை இடைமறித்து, அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், வற்புறுத்தி அழைத்துச் சென்று, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. கேள்வி கேட்டவர்களை துன்புறுத்தியுள்ளனர். பா.ஜ.க தலையிடுவதை அறிந்ததும், 92 பேரை வாகனத்தில் கொண்டு சென்று, கோவையின் பல பகுதிகளில் விடுவித்துள்ளனர். இந்த மோசடிக்கும்பலுக்கும் தி.மு.க.,வுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும். உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரிக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் இதுபோன்ற காப்பகங்களை ஒழுங்குபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.