×

கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதி மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் ஆஜர்படுத்தினர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.  இந்த படுகொலை வழக்கில் 2022 மார்ச் மாதம் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  தவிர தீரன் சின்னமலை பேரவையினர் 8 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த கோகுல்ராஜின் தோழி சுவாதி பிறழ்சாட்சியாக மாறினார்.  சுவாதியின் சாட்சியை பொருட்படுத்தாத நீதிமன்றம் 10 பேருக்கு தண்டனை விதித்தது.  இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  வழக்கில் ஐந்து பேரை விடுதலை செய்ததை கண்டித்து கோகுல்ராஜ் தாயார்  வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்குகள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.  பொறியாளர் கோகுல்ராஜின் தோழி சுவாதி இடம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.   இதை அடுத்து சுவாதியை இன்று நேரில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.  சுவாதியின் பிறழ்சாட்சியை மதுரை உயர் நீதிமன்ற கிளை பொருட்படுத்தாவிட்டாலும் வழக்கில்  சுவாதியை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.  இதை முன்னிட்டு சுவாதியின் குடும்பத்திற்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளனர்.  மேலும்,  சுவாதியை யாரும் சந்திப்பதோ அவருடன் போனில் பேசுவது கூடாது என்று உத்தரவிட்டனர். 

அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி அழைத்துவரப்பட்டு நீதிபதிகளில் முன்னாள் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி இன்றைய விசாரணையில் உண்மையை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.