×

குரங்கம்மை அச்சுறுத்தல் - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

 

கேரளாவில் இருவருக்கு குரம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

குரங்கு அம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் இந்நோய் மனிதனுக்கு பரவுகிறது. உலகச் சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி, உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் கேரளாவில் மட்டுமே இருவருக்கு  குரங்கம்மை தொற்று கண்அறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கும், துபாய் நாட்டில் வந்த அவருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக கேரள பகுதியை ஒட்டிய தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவை இணைக்க கூடிய குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழித்தடங்களில் தமிழக சுகாதாரத்துறையினர்  சிறப்பு முகாம் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல், தலைவலி, குரங்கு அம்மை நோய்க்கான கை மற்றும் உடல்களில் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என சோதனை செய்கின்றனர். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.