×

மாணவி ஸ்ரீமதி இறுதிச்சடங்கில் மாற்றம் : பெற்றோர் எடுத்த திடீர் முடிவு.. 

 


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியுன் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருத நிலையில், தற்போது  உடலை  புதைக்க  உறவினர்கள்  முடிவு செய்திருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த,  கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம்  தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  மாணவி 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.   இந்த விவகாரம் பெரிய அளவில் வன்முறையான  வெடித்த நிலையில்,  அந்த தனியார் பள்ளி பொதுமக்கள் மற்றும் உறவினர்களால் சூறையாடப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேர் இதுவரை கைதாகியிருக்கின்றனர்.  

 மேலும் மாணவி ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு, அவரது  உடல் கடந்த 13-ம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.  அவரது தந்தை நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து ஸ்ரீமதியின் உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.  இருப்பினும் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று,  நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில்  மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள  அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இன்று காலை  மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

 பின்னர்  பலத்த பாதுகாப்புடம்  மாணவி ஸ்ரீமதியின்  உடம் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்பட்டது.  இதனையடுத்து அசம்பாவிதம் நேராமல் இருக்க மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பெரியநெசலூர் கிராமத்தையே  போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.  இந்நிலையில், இறந்து 11 நாட்களுக்குப் பிறகு   இன்று  மாணவியின் உடலுக்கு  அவரது வீட்டில் வைத்து பெற்றோர், உறவினர்கள் கிராமத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் முதலில் மாணவி ஸ்ரீமதியின் உடலை சொந்த ஊரில் தகனம் செய்வதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் தற்போது  திடீர் திருப்பமாக உடலை புதைக்க முடிவு செய்து , அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தகவலை மாணவியின் பெற்றோரும் உறுதிபடுத்தியுள்ளனர்.  ஜேசிபி  வாகனம்  மூலம் புதைப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. மறுபுறம்  மாணவியின் இல்லத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு ,  இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.