×

இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தம்: இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை!

 

இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தமானது இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  ஆற்றிய உரை வருமாறு:-

வைகோ: "இந்தியாவின் முன்னெச்சரிக்கையை மீறி, சீனாவின் நீர்மூழ்கிப் போர்க்கப்பலை இந்த மாதம் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதித்துள்ளது.  இந்தியாவின் கவலையை இலங்கை புறக்கணித்து, சீன நீர்மூழ்கிக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்கும், பொருட்களை ஏற்றுவதற்கும் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அது சாதாரண கப்பல் அல்ல என்பதை நான் இந்த அவைக்கு கூற விரும்புகிறேன். இது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் ஆகும்.கடல்சார் மற்றும் கடலோர வசதிகளை ஆய்வு செய்யக்கூடிய உளவுக் கப்பல் என்பதால், இந்தியாவின் அணுசக்தி மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இது இந்தியாவின் செயல்பாடுகளை உளவு பார்க்க பயன்படும்.இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புகளை மீறி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் போர்க்  கப்பல் ஆகும். இந்தக் கப்பல் ஒரு வார காலம் இலங்கையில் நிறுத்தப்படுவதாக தெரிகிறது.இப்போர்க் கப்பலின் வருகை நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

இலங்கையின் பொருளாதாரப் பேரழிவைச் சமாளிக்க இந்தியா 4 பில்லியன் டாலர்களுக்கு மேல்  நிதி உதவி செய்துள்ள போதும், இந்தியாவின் செயல்களை இலங்கை அரசு பாராட்டாமல் இந்தியா கவலை கொள்ளும் செயலை ஏன் செய்கிறது?இந்தியா தனது கடலோர மற்றும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.சீன நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவை உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இலங்கை அரசை, இந்திய எச்சரிக்க வேண்டும்.சீனப் போர்க் கப்பல் இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த அவையில் தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார்கள்.