×

நாளை 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சு. தகவல்!!

 

தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்   என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்  498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 34 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் இன்புளுயன்சா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்பட பல துறைகளில் தமிழகம் மற்றும் மேகாலயா மாநில சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமைச்சர்  மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.  

இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் இன்புளுயன்சா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1166 ஆக உள்ளது. பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. 
இதன் காரணமாக 1000 இடங்களில் நாளை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் .காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம் . நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.