×

அடுத்து என்ன படிக்கலாம்? 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்

 

உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கென 07.09.2022 முதல் 09.09.2022 வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கடந்த 2021-2022 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு நுழைவுத் தேர்வு முடிவுகளும் வரவிருக்கின்றன. இச்சூழலில் உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கென 07.09.2022 முதல் 09.09.2022 வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படவிருக்கின்றன.

தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளவும் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையாக வழிகாட்டவும் ஆலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன. நுழைவுத் தேர்வு மூலம் நினைத்த கல்வி நிறுவனத்தில் சேர இயலவில்லை எனினும், கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி உரிய வழிகாட்டுவதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலும், மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். அனைத்துப் பள்ளி மாணவர்களும் 14417, 104 ஆகிய எண்களை தொடர்புகொண்டு அழைத்து ஆலோசனைகள் பெறலாம். அரசுப் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் வேண்டி வரும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள்/ ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். 

மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிகளுக்கோ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கோ செல்லலாம். ஆலோசனையின்போது மாணவர் யாரேனும் போட்டித் தேர்வு முடிவுகள் குறித்தோ உயர்கல்வி குறித்தோ குழப்பமான மனநிலையில் இருப்பதாகக் கண்டறியப்படும்பட்சத்தில் 14417 அல்லது 104 ஆகிய உதவி எண்களுக்கோ அல்லது முதன்மைப் பயிற்சியாளர் எண்ணுக்கோ அழைத்து ஆலோசனைகள் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.