×

பெரியார் உணவகம் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்

 

கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் 'தந்தை பெரியார்' எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம், காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் தந்தை பெரியார் எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர், உணவக ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். மதவெறியோடும், சமூகத்தைத் துண்டாடும் நோக்கோடும் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரின் கோரச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.


 


சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இதுபோன்ற மதவாத அமைப்புகளின் அடிப்படைவாதச் செயல்பாடுகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் ஒருநாளும் அனுமதிக்கக்கூடாது. ஆகவே, தந்தை பெரியார் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது கடும் சட்ட நடவடிக்கையைப் பாய்ச்ச வேண்டுமெனவும், தனிமனித உரிமைகளைப் பறிக்கும்விதத்தில் நடந்தேறும் இதுபோன்ற எதேச்சதிகாரப்போக்குகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.