×

கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் 144 தடை உத்தரவு

 

மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து 
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள்  போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு, பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கும் நிலையில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்வீச்சு தாக்குதல், காவலர்கள் மீது தாக்குதல் ஆகியவை நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி லைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதேபோல் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.