×

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழை  எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கேரளா மாநிலத்தை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் நாளை கன மழை பெய்யும் என்று ரெட் அலார்ட் கொடுத்துள்ளது. இதனையடுத்து 2 தேசிய பேரிடர் மீட்பு படையும் ஒரு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையும் நீலகிரி மாவட்டத்திற்கு வரவழைக்கபட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் கன மழை பெய்ய தொடங்கியது. உதகை மற்றும் அதனை ஓட்டி உள்ள முத்தொரை, பாலாடா, நஞ்சநாடு, இத்தலாரு உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டது. 

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளையும் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி செயல்படும் பள்ளி கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.