×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதரம் சீரழிப்பு- உடனே இதனை திரும்ப பெறவேண்டும்: சசிகலா

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற விதத்தில் திமுக தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள மனித மேலாண்மைத்துறையின் அரசாணை எண் 115-ஐ உடனே திரும்ப பெறுமாறு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புகிற பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணை 115-யை திமுக தலைமையிலான அரசு வெளியிட்டு இருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. மிகவும் கண்டனத்திற்குரியது.

 நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகின்ற இளம் சமுதாயத்தினரின் அரசு வேலை என்ற கனவை தகர்க்கும் விதமாக திமுக ஆட்சியாளர்களின் இந்த முடிவு என்பது வருங்கால சந்ததியினருக்கு பெரும் பாதகத்தைத் தான் ஏற்படுத்தும்

 மேலும், அரசு பணியாளர்களின் செயல்பாடுகளையும், திறனையும் மதிப்பிடுகின்ற பொறுப்பை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது ஒரு அறிவார்ந்த செயலாக பார்க்கமுடியாது. அரசு ஊழியர்களின் பணியை மதிப்பீடு செய்வது என்பது எதோ லாப நஷ்ட கணக்கு பார்ப்பது போன்று கருதிவிடமுடியாது. அரசு பணி என்பது அறப்பணி என்ற அடிப்படையில் எத்தனையோ அரசு ஊழியர்கள் தன்னலம் இன்றி மக்களுக்கு அளிக்கும் சேவையாக கருதி மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். எனவே இது போன்று சேவை மனப்பான்மையோடு பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் செயலாகத்தான் இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அமைகிறது.

 மேலும், ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பது, அவர்களின் பணிகளை ஆய்வு செய்வது, காலமுறை ஊதியத்தில் கொண்டு வருவதை முடிவு செய்வது போன்றவைகள் தனியார் வசம் சென்றால், அதன் பின்னர், குறிப்பிட்ட ஒப்பந்த ஊழியர்கள் அரசுக்கு உண்மையானவர்களாக இருப்பார்களா? அல்லது தேர்வு செய்த தனியாருக்கு விசுவாசமாக இருப்பார்களா? என்பது யாருக்கும் தெரியாது?


புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எத்தனையோ சட்டப்போராட்டங்களுக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, அதன் பயனாக சமூகத்தின் அடித்தட்டு மக்களும் அரசு பணிகளில் இருக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, தமிழக மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணையானது, அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மாநில தேர்வாணையத்தின் செயல்பாடுகளை முடக்கி அதனை ஒரு சம்பிரதாய அமைப்பாக மாற்றக் கூடிய அபாயம் ஏற்பட்டுவிடும்.

 அதாவது, அரசு ஊழியர்களை மொத்தமாக தனியார் வசம் கொடுத்தபிறகு, அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் போய்விடும். மேலும், திமுக தலைமையிலான அரசுக்கு அரசு ஊழியர்களை நியமிப்பது, மதிப்பிடுவது, பாதுகாப்பது போன்ற அத்தியாவசிய பணிகளை கூட செய்யமுடியாமல், வேறு என்ன வேலை பார்க்கிறது என்று தெரியவில்லை? எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் பின்னர் தமிழக அரசு எதற்கு? என்று பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் இந்த திமுக தலைமையிலான அரசு வீணாக்க முயற்சி செய்கிறது என்பதை நினைக்கும்போது தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

 எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற வகையிலும், இளம் சமுதாயத்தினரின் அரசு வேலை என்பதை எட்டாக்கனியாக மாற்றுகின்ற விதமாகவும், திமுக தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள, மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணை எண் 115யை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.