×

டெண்டர் முறைகேடு- எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
 

 

ஒப்பந்தங்கள் வழங்கியதற்கு நிர்வாக ரீதியாக முன்னாள் அமைச்சர் வேலுமணிதான் அனுமதி வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், ஒப்பந்த முறைகேடு நடைபெற்றதற்கான அனைத்து முகாந்திரமும் உள்ளதாக அறப்போர் இயக்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக  பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜூ,சித்தார்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் வேலுமணிக்கு எந்த தொடர்பும் இல்லை, அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டவை என வாதிட்டனர். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மத்திய தணிக்கைதுறை அறிக்கையில் டெண்டர்கள் குறைந்துவிலையில் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு,விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததையும் குறிப்பிட்டார்.இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி,ஒரே ஐபி முகவரியில் , ஒரே இடத்தில் டெண்டர்களை நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், 47 ஒப்பந்தங்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும்,ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பு உள்ளது என்றும் வாதிட்டார். 

வேலுமணியின் பினாமியான ராஜன் சந்திரசேகருக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டார்.இதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் சிறு மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக  தெரிவித்தார்.தொடக்கத்தில் கேசிபி என்ஜினியரிங் நிறுவனத்தின் வருமானம் 42 கோடியாக இருந்து,சில ஆண்டுகளில் 167 கோடியாக அபரிதமாக உயர்ந்ததாகவும், மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் எவ்வாறு முறைகேடு நடைபெற்றது என்று விவரிக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நடைபெற்றதற்கான அனைத்து முகாந்திரமும் உள்ளதாக தெரிவித்தார். பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான  ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறைகேடுகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி,ஒரே ஐபி முகவரியில் ஒப்பந்தங்கள் விண்ணப்பிக்கப்பட்டிற்தகான ஆவணங்களை சமர்பித்தார். முதலில் குறைவான விலைக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பின்னர் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அதே ஒப்பந்தம் புதிதாக அதிக விலைக்கு நெருங்கியவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கோரப்பட்டதாக  சுட்டிக்காட்டினார். ஒப்பந்தங்களுக்கு நிர்வாக ரீதியாக அனுமதியை வேலுமணி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.இந்த வாதங்களுக்கு வேலுமணி சார்பில் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, ஆரம்ப கட்ட விசாரணையை புகார் தாரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகே, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.