×

காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து ரஷிய கப்பல் ஊழியர் பலி

 

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க வந்த ரஷ்ய நாட்டு கப்பலில் கிரேன் ரோப் அறுந்து பொருட்கள் விழுந்ததில் ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். 

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கேப்டன், மாலுமி உள்ளிட்ட 18 ஊழியர்களுடன் கடந்த 9 ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. அங்கு கார்கோ சரக்குகள், கனரக வாகனம் மற்றும் உதிரி பாகங்களை கப்பலில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்றிரவு கிரேன் மூலம் பொருட்களை ஏற்றும் போது திடீரென கிரேனின் ரோப் அறுந்து விழுந்தது. இதில் ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஊழியர் கான்ஸ்டான்டின் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிலிப்பைன்ஸை சேர்ந்த கப்பல் ஊழியர் ரொம்மல் கேஸஸ் என்பவர் காயங்களுடன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் உயிரிழந்த ரஷ்ய நாட்டு ஊழியரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் ஆப்பரேட்டர் சீனிவாசன் என்பவரை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.