×

குடியரசு தினம் - அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம்
 

 

 குடியரசு தினத்தை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.  இந்த கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்தக் கிராம சபை கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். குறிப்பிட்ட கிராம சபை கூட்டத்தில்,  தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவாகும். 

இந்நிலையில்  நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி  தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.  கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் கடந்த ஆண்டு ஏப்.1 முதல் டிச.31 வரை பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு அறிக்கை, கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தூய்மைப் பணி, அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சுத்தம் செய்தல், டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுத்தல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.