ராசிபுரத்தில் வீடுகளுக்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருகில் உள்ள மலை பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் நுழைந்து வீடுகளில் உள்ளே உணவு பொருட்களில் விழுந்து வருகிறது. மேலும் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். இரவு தூங்கும் போது படுக்கைகளில் ஏறி காதுக்குள் நுழையும் வகையைச் சேர்ந்த இந்த அட்டைப் பூச்சிகள் அதிகமாக வருவது தங்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து பெய்த மழையால் மலைப்பகுதியில் இருந்து சாரை சாரையாக வந்த சிவப்பு அட்டை பூச்சிகள் வீட்டின் வெளி சுவர்கள்,கழிப்பறை, சமயலறை, மற்றும் பள்ளி வளாகம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக உள்ளது. மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் இந்த மர அட்டைகள் அதிகமாக படையெடுத்துள்ளது.இவைகள் உணவு பொருட்களில் விழுந்து விடுவதால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் சிவப்பு அட்டை பூச்சிகள் அதிக அளவில் இப்பகுதியில் படையெடுத்து வருகிறது. முதலில் பள்ளி வளாகத்தில் இருந்த அட்டை பூச்சிகள் தற்போது தங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கண்துடைப்பிற்காக மருந்துகள் தெளித்துவிட்டு பிறகு இந்த பகுதி பக்கமே வராததால் தொடர்ந்து சிவப்பு அட்டை பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் படையெடுத்து வருவதாகவும், உடனடியாக ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.